×

பன்றி, டெங்கு காய்ச்சல் மிரட்டி வரும் நிலையில் சென்னையில் மாநகராட்சி மருத்துவமனைக்கு ‘பூட்டு’

சென்னை: தமிழகம் முழுவதும் பன்றி, டெங்கு காய்ச்சல் மிரட்டி வரும் நிலையில், சென்னையில் மாநகராட்சி மருத்துவமனைக்கு பூட்டு போடப்பட்டுள்ளது ஏழை எளிய மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் 15 மண்டலங்கள் உள்ளன. இங்கு லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் வசதிக்காக சுகாதாரத்துறையின் சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. அதன்படி, சென்னையில் 138 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்க்க இயலாத ஏழை எளிய மக்கள் இங்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், பெரும்பாலான இடங்களில் சுகாதார நிலையங்கள் பெயரளவிற்கே செயல்படுகிறது. இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் மருத்துவமனைக்கே பூட்டு போட்டு விட்டு, அங்கு யாரும் வராமலே இருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது சென்னை மயிலாப்பூர் மண்டலம் 9, வார்டு 125 பகுதியில் பேராசிரியர் சஞ்சீவி தெருவிலேயே நடந்துள்ளது.இங்குள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் அம்மா உணவகம், குழந்தைகள் மையம், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளன.இந்த மருத்துவமனை கடந்த 30 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஒரு வருடமாக மருத்துவர்கள், நர்ஸ்கள், ரத்த பரிசோதனை செய்பவர்கள் என எந்த பணியாளரும் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பிரச்னை ஏற்பட்டு விடாமல் தடுக்க, ‘பார்மசிஸ்ட்’ மட்டும் வாரத்தில் இரண்டு நாட்கள் வருகிறார். அவர் சிகிச்சை பெற வரும் நோயளிகளுக்கு எவ்விதமான மருத்துவரின் ஆலோசனைகளும் பெறாமல் தன்னிச்சையாக மாத்திரைகளை மட்டும் கொடுத்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்த சுகாதார நிலையத்தில் போதிய வசதி இல்லை எனக்கூறி மேல் சிகிச்சைக்காக, ராயப்பேட்டை மற்றும் ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பி வந்தனர். இதனால், சிகிச்சை மையத்தை மேம்படுத்த வேண்டும் என அப்போது மேயராக இருந்த மா.சுப்பிரமணியனிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கடந்த 2010ல் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில் ரூ.41.51 லட்சம் செலவில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் டாக்டர்கள் அறைகள், ரத்த பரிசோதனை நிலையம், ஸ்கேன், எக்ஸ்ரே கொண்ட அதிநவீன மருத்துவமனையாக மாற்றப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இது, அப்பகுதி மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.

ஆனால், மாநகராட்சி, மருத்துவர்கள், பணியாளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கடந்த ஓராண்டாக சுகாதார நிலையம் பூட்டியே கிடக்கிறது. தற்போது தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த இரண்டு நாளில் மட்டும் 15 பேர் பலியாகியுள்ளனர்.அப்படியிருக்கும் நிலையில், மாநகராட்சி மருத்துவமனை மூடி கிடப்பதால் அப்பகுதி மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், ‘‘மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. காசநோய், சர்க்கரை ேநாயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், கர்ப்பிணிகள் வாரம்தோறும் மாத்திரை வாங்க, பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளியோர் மற்றும் வயதானவர்களின் நலனை கருத்தில் கொண்டு, டாக்டர்கள் சிகிச்சை அளிக்க வருவதை உறுதிப்படுத்த வேண்டும்’’ என்றனர்.

அரசு டாக்டர்களே காரணம்:
அரசு மருத்துவமனை டாக்டர்கள், பெரும்பாலும் சொந்த மருத்துவமனை வைத்துள்ளனர். மேலும், பெரிய தனியார் மருத்துவமனைகளிலும் பணியாற்றுகின்றனர். இதனால், தங்களது பணி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு வராமல் சொந்த மருத்துவமனைக்கு சென்று விடுகின்றனர். எனவே, அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், டாக்டர்கள் ஓபி அடிப்பதை தடுப்பதற்காக ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவேடு கொண்டுவரப்பட்டது. இதற்கு டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நடைமுறை செயல்படுத்தப்படவில்லை. இதே நிலையே அனைத்து அரசு மருத்துவனைகளிலும் தொடர்கிறது. இதை தடுக்க அரசு மருத்துவமனை டாக்டர்கள், அங்கு மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்ற சட்டம் இயற்ற வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,municipality hospital , Pig, dengue fever, corporation hospital, closure
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்